×

தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தகால் நடும் நிகழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பந்தகால் நடும் வைபவம் நேற்று நடந்தது. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையத்தின் பின்புறம் தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், 12 ஆண்டுக்கு ஒருமுறை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இறுதியாக, கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு, 25 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை. மேலும், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, கடந்த 2021ம் ஆண்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி தலசயன பெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் வைபவம் நேற்று நடந்தது. இதையடுத்து, கொடிமரம் அருகே மற்றும் வாகன மண்டபம் என இரண்டு இடங்களில் பந்தகால் நடப்பட்டது. முன்னதாக, பந்தகாலுக்கு பால், தயிர் மூலம் அபிஷேகம் செய்து, மஞ்சள் பூசப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சக்திவேல், உபயதாரர் குமார், பட்டாச்சாரியார்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

The post தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தகால் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pandakal ,Kumbabhishekam ,Thalasayana Perumal temple ,Mamallapuram ,Kumbabhishek ceremony ,Pandakal planting ceremony ,kumbabhishekam planting ceremony ,
× RELATED தேவங்குடி கோதண்ட ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்